அலங்காநல்லூரில் போலீசார் அத்துமீறல்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் நேற்று இருமுறை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்னிலையிலேயே நடந்த தடியடியால் அவர்கள் மிரட்சிக்கு ஆளாகினர்.

அலங்காநல்லூருக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று காலை 8 மணிக்கே வந்து விட்டனர். ஆனால் இவர்களை நீண்ட நேரமாக கேலரிக்கு அனுப்பாமல் போலீசார் வெளியிலேயே நிறுத்தி வைத்தனர். விஐபி பாஸ் பெற்ற முக்கிய பிரமுகர்களில் சிலரும் இவர்களுடன் சேர்ந்து காத்திருந்தனர். இப்படி 300க்கும் அதிகமானோர் காத்திருந்த நிலையில், போலீசார் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். காத்திருந்தவர்களில் சிலர், எதிர்ப்பு தெரிவித்து தடுப்பு வேலியை தள்ள முயன்றனர். இதைக்கண்டு ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆயுதப்படையினர் திடீரென நின்றிருந்த கூட்டத்தினர் மீது தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் சிதறி ஒடினர். இதனைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் மிரட்சிக்கு ஆளாகினர். பிறகு அங்கிருந்த அதிகாரிகள் தலையிட்டு, சுற்றுலா பயணிகளை 2 மணி நேர தாமதத்திற்குப்பிறகு கேலரிக்கு செல்ல அனுமதித்தனர்.

மலேசியாவை சேர்ந்த ரஞ்சனி கூறும்போது, ‘எனது பூர்வீகம் கும்பகோணம். 3 தலைமுறைக்கும் முன்பாக மலேசியா போய் விட்டோம். ஜல்லிக்கட்டை சினிமா, டிவியில்தான் பார்த்துள்ளேன். நேரில் காணும் ஆசையில்தான் பதிவு செய்து இங்கு வந்தோம். சாப்பிடாமல் கூட, காலை 8 மணிக்கே வந்துவிட்ட எங்களை இரண்டு மணி நேரம் அழைக்கழித்த பிறகே அனுமதித்தது வேதனையளிக்கிறது. நாங்கள் நின்றிருந்த பகுதியில், எங்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டு மிரண்டு போய்விட்டோம்’ என்றார்.

இதேபோல், வாடிவாசல் அருகே முன்பதிவு செய்த காளைகள் டோக்கன் வரிசைப்படி ஜல்லிக்கட்டுக்காக அனுமதித்தனர். காளைகளை வரிசையாக கொண்டு வந்தபோது, சிலர் தாங்கள் விஐபி டோக்கன் வைத்திருக்கிறோம் எனக்கூறி, தடுப்புகளை கழற்றி அதன் வழியாக காளைகளை உள்ளே நுழைத்தனர். இதில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே காத்திருந்த மாடு வளர்ப்போர் தங்கள் காளைகளை வரிசையில் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டனர். தங்களுக்கு தெரிந்தவர்களை போலீசார், விஐபிகள் வரிசையில் அனுமதித்ததும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், திரண்டிருந்த கூட்டத்தின் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

Related Stories: