மதுரை புறநகர் பகுதியில் ஓராண்டில் மட்டும் 1,696 விபத்துக்களில் 282 பேர் பலி: படுகாயமடைந்தவர்கள் 2,101 பேர்

மதுரை: மதுரை புறநகர் பகுதியில் கடந்த வருடம் நடந்த 1,696 விபத்துக்களில் 282 பேர் உயிரிழந்துள்ளனர்.மதுரை புறநகர் பகுதியில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை, கஞ்சா விற்பனை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க எஸ்பி., மணிவண்ணன் உத்தரவில், போலீஸ் அதிகாரிகள் ரோந்து, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்தியுள்ளனர். எனினும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.இந்நிலையில் கடந்த வருடம் புறநகர் பகுதியில் 61 கொலைகள், 6 வழிப்பறி கொலைகள், 119 வழிப்பறிகள், 25 பகல் நேர கொள்ளைகள், 89 இரவு கொள்ளைகள், 193 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.இதேபோல் திருமங்கலம், வாடிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் ரிங்ரோடு பகுதிகளில் 1,696 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். 2,101 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலியல் தொல்லை போன்ற 63 சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் 70 சதவீத சம்பவங்களில் குற்றவாளிகள் அடையாளம் கண்டு, தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வரும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க சாலைகளில் நடுவில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதாக வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து ஆயிரம் கிலோவிற்கு மேலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை எஸ்பி., பரிந்துரையில் கலெக்டர் உத்தரவில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புறநகர் பகுதியில் எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் பல்வேறு சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. எனினும் கடந்த காலங்களில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறது. போலீசார் பற்றாக்குறை நிலவி வருவதும் ஒரு முக்கிய காரணமாகும். இளம் குற்றவாளிகளும் பெருகியுள்ளனர். குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பொதுமக்களை இணைத்து கண்காணிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க அரசிடம் கோரப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: