சாத்தூரில் காணும் பொங்கலையொட்டி வைப்பாற்றில் மணல் மேட்டுத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் திரளாக கூடினர்

சாத்தூர்: சாத்தூரில் காணும் பொங்கலையொட்டி வைப்பாற்றில் மணல் மேட்டுத் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால் விழாக்கோலம் பூண்டது.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களும், பட்டாசு ஆலை தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இவர்கள் மாட்டுப் பொங்கலன்று வைப்பாற்றில் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழ்ச்சியாக பொழுது போக்குவர். இதை மணல் மேட்டுத் திருவிழா என அழைப்பர். இது ஆண்டு தோறும் நடக்கும்.

இந்தாண்டு காணும் பொங்கலையொட்டி சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்களுடன் நேற்று முன்தினம் வைப்பாற்றில் கூடினர். இந்த விழாவையொட்டி சாத்தூர் பகுதியில் உள்ளவர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும், காணும் பொங்கலன்று சொந்த ஊர் வந்துவிடுவர்.
Advertising
Advertising

மணல் மேட்டுத்திருவிழாவில் கபடி, கோகோ, ஓட்டப்பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டுகளை பெண்கள், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். வைப்பாற்றில் நடக்கும் மணல் மேட்டுத் திருவிழாவில் கலந்து கொள்வதால் புது உற்சாகம் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விழாவில் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் கலந்து கொண்டார். சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த விழா குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பாரம்பரியமான மணல் மேட்டுத் திருவிழா நடக்கும் வைப்பாற்றில், முட்செடிகள் வளர்ந்துள்ளன. கழிவுநீர் தேங்கியுள்ளன. ஆற்றில் மணல் அள்ளி பாறையாக காட்சியளிக்கிறது. எனவே, இனி வரும் காலங்களிலாவது திருவிழா நடக்கும் காலங்களில் ஆற்றில் உள்ள முட்செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: