×

வத்திராயிருப்பு அருகே பராமரிப்பில்லாத பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா

* விளையாட்டு உபகரணங்கள் சேதம்
* மூடிக்கிடக்கும் மீன் அருங்காட்சியகம்
* சுற்றுலா வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பெரியாறு அணைப்பூங்கா பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கிறது. இதனால், அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, அணைப் பூங்காவை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தண்ணீர் திறப்புக்கு முன்பே பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்து, அபாய அளவை எட்டியதால், அணைக்கு வந்த நீரை, அப்படியே திறந்துவிட்டனர். பின்னர், அரசு அறிவிப்பின்பேரில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பல்வேறு கண்மாய்கள் நீர் நிரம்பியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு அணையும் நிரம்பி, கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

பராமரிப்பில்லாத பூங்காஇந்நிலையில், பிளவக்கல் பெரியாறு அணைப்பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன. ஊஞ்சல்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. வேரோடு சாய்ந்த மரங்கள், அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்படாமல் சேதமடைந்துள்ளது. பயணிகள் அமரும் அறை குப்பையாக கிடக்கின்றன. பூங்கா முழுவதும் சுத்தம் செய்யாமல் குப்பையாக காட்சியளிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மீன் அருங்காட்சியகம் மூடிய நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி முதல் தொடர் விடுமுறையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள், பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘பிளவக்கல் பெரியாறு அணைப்பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. சாய்ந்த மரங்களை அகற்ற வேண்டும். கழிப்பறைகளை திறந்து பராமரிக்க வேண்டும். பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சேதமடைந்த ஊஞ்சல்களை சீரமைக்க வேண்டும். சுறுக்குகளை சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

அணைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க வேண்டும். பூங்கா மற்றும் 2 அணைகளிலும் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்தனர். தற்போது 3 ஆண்டாக ஒரு பணியாளர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். அதிகாரிகள் 4 பேர் உள்ளனர். பணியாளர் பற்றாக்குறையால் பூங்கா பராமரிப்பின்றி சிதைந்து போய் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம்:
பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த உயரம் 47.56 அடி. தற்போதைய நீர்மட்டம் 26.84 அடி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 கன அடி.

Tags : Pilavar Periyar Dam Dam ,Vatarayapuram ,Pilavar Periyar Dam , Pilavar Periyar ,maintained ,Vatarayapuram
× RELATED வத்திராயிருப்பு அருகே...