பட்டிவீரன்பட்டி முத்துலாபுரத்தில் கோயில் திருவிழா 1200 அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி கருப்பனுக்கு நேர்த்திக்கடன்: பக்தர்கள் பரவசம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரத்தில் நடந்த கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் சுமார் 1200 அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரத்தில் உள்ளது  ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயில். 400 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நிலக்கோட்டை ஜமீனாக பூனப்பநாயக்கர் இருந்த காலத்திலிருந்தே ஆண்டுதோறும் தை 3ம் தேதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் தங்கள் குறைகளை தீர்க்க வேண்டி வசதிக்கு ஏற்றவாறு 2 அடி முதல் 21 அடி வரை அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.

முன்னதாக நேற்று கோயில் பூசாமி, சாமியாடி ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து இரவு பக்தர்கள் காணிக்கை அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலின் மேற்புறத்தில் அடுக்கி வைத்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் இரும்பு தகடினால் ஆன அரிவாள்களையும், ஒரு சில பக்தர்கள் தங்க அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவிழாவையொட்டி கிடா வெட்டு, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, நீலகிரி, சிவகங்கை, சென்னை, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் அரிவாள் எண்ணிக்கை

இதுகுறித்து கோயில் விழா குழுவினர் கூறுகையில், ‘இந்த ஆண்டு அரிவாள்கள் பல வடிவங்களில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த அரிவாளர்கள் ஒரே பிடியில் 3 முதல் 20 அரிவாள்கள் இருக்குமாறு செய்யப்படுகின்றன. சிறிய அரிவாள்களுக்கு மர பிடியும், பெரிய அளவில் செய்யப்படும் அரிவாள்களுக்கு இரும்பு பிடியும் செய்யப்படுகின்றது. இந்த அரிவாள் செய்யும் பணியில் இந்த ஊரை சேர்ந்த போன்ற 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரம்பரையாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு அரிவாளுடன் கருப்புச்சாமி உருவம் பொறித்தும், காணிக்கையாக வழங்கிய பக்தர்கள் பெயர்கள் பொறித்தும், மணி வைத்தும் அரிவாள்கள் செய்யப்பட்டிருந்தன. இங்கு ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல் அரிவாள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.. சென்ற ஆண்டு 1100 அரிவாள்களுக்கு மேல் காணிக்கையாக வந்தது. இந்த ஆண்டு1200 அரிவாள்களுக்கு மேல் வந்துள்ளன’ என்றனர்.

Related Stories: