காணும் பொங்கலையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி : காணும் பொங்கலையொட்டி பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவி மற்றும்  ஆழியாரில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.  பொள்ளாச்சியை அடுத்த  ஆழியார் அணை, பூங்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி  மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இதில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு  சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர்.

நேற்று காணும் பொங்கலையொட்டி,  ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில்  இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகளவில்  வந்திருந்தனர்.

இதில், சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து,  ஆழியார் பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்தனர். அங்கு சிறுவர்கள் மற்றும்  இளைஞர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அதுபோல், சுற்றுலா பயணிகளில்  பெரும்பாலானவர்களும் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவிக்கும் ஆர்வமுடன்  சென்றனர். இதில் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.  நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்  வந்திருந்தனர். குரங்கு அருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா  பயணிகள் வெகுநேரம் நின்று குளித்து சென்றனர். குரங்கு அருவிக்கு நேற்று  வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: