கீழக்கரை பகுதி கடல் வளம் அழியும் அபாயம்

*சாக்கடை நீர் நேரடியாக கலக்கும் அவலம்

Advertising
Advertising

கீழக்கரை : சாக்கடை நீர் நேரடியாக கலப்பதால் கீழக்கரை கடல் பகுதியின் வளம் அழியும் அபாயத்தில் உள்ளதாக கடல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நகரின் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மூலமாக தினமும் 10 லட்சம் லிட்டருக்கு மேல் நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி நிர்வாகம் மாறினாலும் இப்பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரின் மொத்த கழிவுநீரையும் சுத்திகரிக்க எந்த வசதியும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கழிவுநீர், மன்னார் வளைகுடா கடல் மாசடைந்து வருகிறது.

மன்னார் வளைகுடாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடற்பாசிகள், கடல்புற்கள் உள்ளன. கடற்பாசிகள் மீன்களுக்கு பெரும் உணவாக உள்ளது. பவளப்பாறைகள், கடல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியை செய்கிறது. இவற்றில்தான் மீன் இனங்களும், அரிய வகை உயிரினங்களும் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. சர்வதேச அளவில் மன்னார் வளைகுடா முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாக்கடை நீர் நேரடியாக கலப்பதால் மீன் வளம் கீழக்கரை பகுதி கடலில் குறைந்து விட்டதாகவும் எதிர்காலத்தில் முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த நிலையால் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடலில், இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகள், அழிந்து வரும் அபாயம் இருப்பதாக கடல்வாழ் ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மன்னார் வளைகுடாவை பாதுகாக்க நிறுவப்பட்டுள்ள, தேசிய பூங்கா வனத்துறையினரும், உயிர்கோள காப்பக அறக்கட்டளை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தி,மு.க. ஆட்சியில் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பின் கைவிடப்பட்டது. அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து மின்சாரம் உள்ளிட்ட மாற்று சக்தியை உருவாக்கலாம். பண்டைய‌ காலத்தில் துறைமுகமாக‌ திகழ்ந்த கீழக்கரை கடல் பகுதி தற்போது கடல் வாழ் உயிரனங்கள் வாழ தகுதியற்ற அபாயகராமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இதுகுறித்து மக்கள் டீம் காதர் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சாக்கடை நீர் நேரடியக கலப்பது குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பல கோடிகளை தேவையில்லாத திட்டங்களுக்கு செலவு செய்ய காட்டும் அக்கறையை சில கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாக்கடை நீரை சுத்திகரித்து கடலுக்கு அனுப்பினால் பெரும் நலன் பயக்கும். உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து சாவண்ணா கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை கடற்கரையோரம் சிறு ஆமைகள், நண்டுகள் சுற்றி திரிவதை காண முடியும். தற்போது அதெல்லாம் கனவாகி போனது. காரணம் கீழக்கரை கடல்பகுதி சீர் கேடாகி போனதுதான். ஒரு காலத்தில் நாளொன்றுக்கு கீழக்கரை கடல் பகுதியில் 2 டன் மீன்கள் பிடிபட்டது. தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலை நீடித்தால் கீழக்கரை கடல் பகுதி டெட் சீ எனப்படும் பயனற்ற பகுதியாக மாறிவிடும். கலெக்டர் உடனடியாக இதனை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Related Stories: