திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கே.எஸ்.அழகிரியுடன் கே.வி.தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்ததாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி கமல்ஹாசன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். மதசார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கமல் பாஜக ஆதரவாளர் ரஜினியின் உதவியை நாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் செய்வது தவறில்லை என்றும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் இரு கட்சி கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆரோக்யமான விவாதங்கள் தான் நடந்தது என்று விளக்கம் அளித்தார். குடியுரிமை சட்டம் குறித்து கருத்து கூறமுடியாத அதிமுக எங்கள் கூட்டணி குறித்து கருத்து சொல்வது தவறு என்று தெரிவித்துள்ளார்.

 ஸ்டாலின் - நாராயணசாமி சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அவை அனைத்தும் பேசி சரி செய்து கொள்வோம் என்று தெரவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, எங்களுக்குள் விரிசல் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

Related Stories: