தொடர் விடுமுறையால் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிகின்றனர் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் : பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலாதலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் பொழுதை கழிப்பர்.

Advertising
Advertising

இங்கு நடைபெறும் கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், நாகர்கோவில், செங்கோட்டை, வள்ளியூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஐயப்ப சீசன் காலம், அரையாண்டு தேர்வு மற்றும் புத்தாண்டு விடுமுறையை ெதாடர்ந்து தற்போது பொங்கல் விடுமுறை என கடந்த 2 மாதங்களாக திருச்செந்தூரில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.

இதனால் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் நிற்பதற்கு கூட இடமில்லாத வகையில் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். நேற்றும் விடுமுறை நாள் என்பதால் கோயிலில் கட்டுக்கடங்காத  கூட்டம் காணப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்ட முதலே பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இலவச தரிசனம் செய்வதற்காக வள்ளி குகை முன்பு இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் சுவாமி தரிசனம் செய்வதற்காக 20 ரூபாய் டிக்கெட் எடுத்தவர்களின் வரிசை தூண்டிகை விநாயகர் கோயில் வரையும், மற்றொரு வரிசை கடற்கரை வரையும் காணப்பட்டது. ரூ.100 மற்றும் ரூ.250 டிக்கெட் எடுத்தவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கலையரங்கம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோயில் பகுதியில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் பெண்கள், சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை, பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் உரிய ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

வெயிலில் காத்திருக்கும் அவலம்

தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. நாழிக்கிணறு மற்றும் கடலில் குளிக்கும் பெண்கள் உடை மாற்றுவதற்கு போதிய அறைகள் இல்லாததால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். நாழிகிணறு அருகே உள்ள குளியல் அறையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி சகதி போன்று காணப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது சுவாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு கவுன்டர் மடம் அருகே பூட்டிக்கிடக்கும் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் தற்காலிக மேற்கூரை அமைக்கலாம். இதன்மூலம் பக்தர்கள் வெயிலில் காத்திருப்பதை தவிர்க்க முடியும்.

Related Stories: