எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பெங்களூருவில் கைது

பெங்களூரு: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை பெங்களூருவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். வில்சனை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப் படுவோரில் மன்சூர், சலீம், மெகபூப் ஆகியோர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பன்னேர்கட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது.

இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை 17 பேர் அடங்கிய தீவிரவாத கும்பல் சுட்டுக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். இவர்களில் ஏற்கனவே தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரை உடுப்பியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த 2 பேருக்கும் குழித்துறை நீதிமன்றம் 3 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த 2 பேர் மீதும் உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடியரசு தின விழாவை சீர்குலைக்க தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

Related Stories: