அடுத்த மாதம் அறிமுகமாகிறது பயண தூரத்துக்கு ஏற்ப மோட்டார் வாகன காப்பீடு

புதுடெல்லி: பயண தூரத்துக்கு ஏற்ப மோட்டார் வாகன காப்பீடு செய்யும் புதிய வசதியை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபோல், மருத்துவ காப்பீடுகளுக்கும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மருத்துவ காப்பீடு மற்றும் மோட்டார் வாகன காப்பீடு தொடர்பான 37 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. காப்பீட்டு துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய காப்பீடுகளை அறிமுகம் செய்ய இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த ஆணையத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை, இதற்கான பிரத்யேக குழு ஆய்வு செய்து, புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு புதிய காப்பீடுகள் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. தேவைப்பட்டால், இந்த கால அளவு நீட்டிக்கப்படும் என காப்பீடு ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனத்தின் வயது, மாடல் ஆகியவற்றுக்கு ஏற்ப காப்பீடு பிரீமியம் தற்போது நிர்ணயிக்கப்படுகிறது. பயண தூரம் அடிப்படையில் காப்பீடு மேற்கொள்ளும் வகையில் புதிய காப்பீடு வசதிகள் அடுத்த மாதம் அறிமுகம் ஆகின்றன. இதுபோல், மருத்துவ காப்பட்டை பொருத்தவரை அவரவர் மருத்துவ தேவைக்கு ஏற்ப காப்பீடு, பிட்னஸ் டிராக்கர் அடிப்படையிலும், ஆப்ஸ் மூலம் கண்காணிக்கப்படும் நீரிழிவு நோய் அடிப்படையில் காப்பீடு, ரத்தத்தில் கொழுப்பு படிம அளவுகளுக்கு ஏற்ப காப்பீடு உட்பட புதிய காப்பீடு முறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: