×

பெரம்பூர் பகுதியில் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை விடும் அதிகாரிகள்: தொற்றுநோய் பீதியில் மக்கள்

பெரம்பூர்: வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, சிறு மழை பெய்தால் கூட ஆங்காங்கே மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்குகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டிய அதிகாரிகள், மாறாக அடைப்பு ஏற்படும் பகுதிகளில் மேன்ஹோலில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவுநீரை உறிஞ்சி, அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே, இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 44வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன்சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அடைப்பு காரணமாக, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், அதை சரி செய்யாமல், மேன்ஹோல் வழியாக கழிவுநீரை உறிஞ்சி, அருகில் உள்ள மழைநீர் வடிகால் வெளியேற்றினர். இந்த கழிவுநீர் தாழ்வான பகுதியில் தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.

இதனால் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மர்ம காயச்சல் பரவி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளுக்கு இதுபற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. சமீப காலமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், சம்பவ இடத்துக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள், மின் மோட்டார் மூலம், மேன்ஹோல் வழியாக கழிவுநீரை உறிஞ்சி, அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ெகாசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.  எனவே, பாதாள சாக்கடை அடைப்பை முறையாக சீரமைக்கவும், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : People in Fear of Infection ,Perambur ,Rainwater Canal , Perambur, rainwater canal, sewage, authorities, epidemic, people in panic
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது