×

காணும் பொங்கல் கொண்டாட்டம் மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் மருத்துவ முகாம்: துப்புரவு பணிக்கு கூடுதல் ஊழியர்கள்

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று காணும் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனால் பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.  அதன்படி சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.

எனவே சென்னை மாநகராட்சி சார்பில் இந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மாநகர நல அலுவலர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் மெரினா கடற்கரையில் 2 முகாம்கள், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு முகாம் என்று மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இங்கு காலை, மாலை என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினார்கள். இதை தவிர்த்து பெசன்ட்நகர் மற்றும் மெரினா கடற்கரையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மெரினா கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கூடுதலாகவும், பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் கூடுதலாகவும் பணி அமர்த்தப்பட்டனர். இந்த பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : celebration ,Corporation ,Camp ,corporations ,Pongal Celebration , Pongal celebration , seen on behalf , corporation, 6 places, medical camp
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்