நங்கநல்லூர் பகுதியில் குப்பை, கழிவுநீர் கலப்பதால் மாசடையும் கோயில் குளம்: பக்தர்கள் முகம் சுளிப்பு

ஆலந்தூர்: நங்கநல்லூர் பனச்சியம்மன் கோயில் குளத்தில் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. சென்னை மாநகராட்சி, 12வது மண்டலம், 164வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் பனச்சியம்மன் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக தூர்ந்து கிடந்த இந்த கோயில் குளத்தை ₹1.25 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கவும், நடைபாதை மற்றும் கைபிடி அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, இதற்கான டெண்டர் விடப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன் பணி தொடங்கியது. ஆனால், குளத்தை சீரமைக்கும் பணி மற்றும் நடைபாதை அமைக்கும் பணி போன்றவை முறையாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் அண்மையில் பெய்த மழைருடன், கழிவுநீர் கலந்து இந்த குளம் நிரம்பி காணப்படுகிறது.

இதனுடன் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்துள்ளதால் தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால், குளத்தின் அருகில் உள்ள காரிய மண்டபத்தில் ஈமச்சடங்குகளை செய்ய வருவோர் இந்த குளத்து நீரில் குளிப்பதற்கு முகம் சுளிக்கும் நிலை உள்ளது. குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்காததால் குளத்து நீர் அங்குள்ள காரிய மண்டபம், அம்மா உணவகம் போன்றவற்றை சூழ்ந்து நிற்கிறத. இதனால், கட்டிடங்கள் வலுவிழந்து, இடியும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு நடைபாதை பணிக்காக அமைக்கப்பட்ட கைபிடியும் நீரில் மூழ்கி காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், தொடர்ந்து கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தை முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: