×

காஷ்மீர், குடியுரிமை சட்டத்தில் மூக்கை நுழைத்த மலேசியாவுக்கு இந்தியா பதிலடி: பாமாயில் இறக்குமதியை நிறுத்த முடிவு

புதுடெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த மலேசியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறது. இது, மலேசியாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உலகளவில் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முதலிடத்திலும், மலேசியா 2வது இடத்திலும் உள்ளன. அதே நேரம், மலேசியாவை விட இந்தோனேஷியா மிக குறைந்த விலைக்கே பாமாயிலை விற்பனை செய்கிறது. இருப்பினும், மலேசியா தனது நெருங்கிய நட்பு நாடு என்பதால், அந்த நாட்டிடம் இருந்தே இந்தியா ஆண்டுதோறும் 44 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம், இந்நாட்டிடம் இருந்து அதிகளவில் பாமாயில் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தை சீனாவும், 3வது இடத்தை பாகிஸ்தானும் உள்ளன. இந்நாடுகள் கடந்த ஆண்டுக்கு முறையே 24 லட்சம் டன்னும், 10 லட்சம் டன்னும் வாங்கியுள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை மலேசிய பிரதமர் மகாதிர் முகமது சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இது, மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மலேசியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பதிலடியை இந்திய அரசு தரும் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத மகாதிர், பிரதமர் மோடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மலேசிய பாமாயில் எண்ணெய் துறையின் அமைச்சர் தெரசா கோக், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவால், மலேசிய பாமாயில் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மலேசியாவின் பாமாயிலை வாங்கும் நாடுகளில் 24 சதவீதத்துடன் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய இழப்பை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதின் மூலமும் ஈடுகட்ட முடியாது என்பதை மலேசிய அரசு உணர்ந்துள்ளது. இதோடு, மலேசியாவில் இருந்து மின்னனு பொருட்களை இறக்குமதி செய்யவும் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, மத்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது மட்டுமல்ல... இன்னும் இருக்கு...
மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த மலேசிய அரசுக்கு பாமாயில் இறக்குமதியை நிறுத்தியது மட்டுமின்றி, வேறு பல பொருளாதார ரீதியான நெருக்கடிகளை கொடுக்கவும் பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியா 7வது இடம் வகிக்கிறது. எனவே, மற்ற உற்பத்தி பொருட்களையும் வாங்குவதை இந்தியா நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ, மலேசியாவின் பொருளாதாரம் பெரியளவில் ஆட்டம் காணும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : India ,Malaysia ,entry ,Kashmir ,Nose , Kashmir, Citizenship Act, Nose Entered, Malaysia, India, Retaliation
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…