திருமண வயதில் 2 மகள் இருக்காங்க கொஞ்சம் கருணை காட்டுங்க ஐயா: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி; உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து பாஜ முன்னாள் எம்எல்ஏ செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2017ம் ஆண்டு கடத்தி, பாஜ எம்எல்ஏ செங்கார் பாலியல் பலாத்காரம் செய்தார். சிபிஐ.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி செங்காருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் செங்கார் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்காரா செகல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், `‘தனது குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரே நபர் செங்கார் தான். அவருக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர். விசாரணை நீதிமன்றம் அளித்த காலக்கெடுவான வரும் 20ம் தேதிக்குள் அபராதத் தொகை ரூ.25 லட்சத்தை செலுத்த அவரால் முடியாது. எனவே, இந்த தொகையை செலுத்துவதற்காக காலத்தை நீடிக்க வேண்டும்,’’ என்றார். அப்போது சிபிஐ வக்கீல் குறுக்கிட்டு, ‘`செங்காரின் மனைவி ஒரு அரசு அதிகாரி எனவே, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டபடி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சத்தை செங்கார் முதலில் வழங்க வேண்டும். பின்னர், மீதி தொகை ரூ.15 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தலாம்,’’ என்றார். இதையடுத்து, நீதிபதிகள் 60 நாட்களில் அபராத தொகையை செலுத்த செங்காருக்கு அனுமதி வழங்கியது. மேலும், செங்காரின் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: