விருது அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி பாரத ரத்னாவை விட மேலானவர் மகாத்மா: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசத்துக்கு மகாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்புக்காக மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அனில் தத்தா சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் கவாய், சூர்ய காந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மகாத்மா காந்தி இந்த தேசத்தின் தந்தை. மக்கள் அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். இதற்கும் மேல் எந்த விதமான அங்கீகாரமும் அவருக்கு தேவையில்லை. அவர் பாரத ரத்னா விருதுக்கும் மேலானவர். அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கும்படி மத்திய அரசை அறிவுறுத்துவது செய்யத் தகுந்த செயல் அல்ல. இருப்பினும், இந்த வழக்கை தொடர்ந்தவரே மத்திய அரசை அணுகி மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க கோருவதற்கு அனுமதி அளிக்கிறோம். விசாரணைக்கு ஏற்க இயலாத இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: