சாய்பாபா பிறந்தது ஷிர்டி அல்ல புது தகவலால் கிளம்பியது சர்ச்சை: ஷிர்டி மக்கள் கலக்கம்

மும்பை: ஷிர்டி சாய்பாபா பிறந்த இடம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மகாராஷ்டிராவின் பர்பனி மாவட்டத்தில் உள்ள ‘பத்ரி’ என்ற இடத்தில்தான் அவர் பிறந்ததாக கூறப்படுவதால் ஷிர்டி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டம் ஷிர்டியில் உலகப் புகழ்பெற்ற சாய்பாபா கோயில் உள்ளது. இதனால், இந்த நகரம் இந்தியாவின் முக்கியமான புண்ணியத் தலமாக கருதப்படுகிறது. சாய்பாபா கோயில் இருப்பதாலேயே ஷிர்டி அனைத்து விசயங்களிலும் வளர்ச்சி பெற்ற நகரமாக திகழ்கிறது.

இந்த நிலையில், பர்பனி மாவட்டத்தில் உள்ள ‘பத்ரி’ என்ற ஊரில்தான் சாய்பாபா பிறந்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் பத்ரிக்கு சென்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, அந்த சிறுநகரின் மேம்பாட்டுக்காக 100 கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். இவ்வாறு பத்ரி நகரம் வளர்ச்சியடையும் பட்சத்தில் ஷிர்டி தனது முக்கியத்துவத்தை இழந்து விடும் என்று அந்நகர மக்களும் பக்தர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. துர்ராணி அப்துல்லா கான் நேற்று கூறியதாவது; பத்ரி நகரம்தான் சாய்பாபாவின் உண்மையான ஜென்மபூமி. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட ஒருமுறை இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். பத்ரியில்தான் சாய்பாபா பிறந்தார் என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஷிர்டி சாய்பாபாவின் கர்மபூமி என்றால், பத்ரி அவரது ஜென்மபூமி என்பதுதான் உண்மை. அதனால் இவ்விரு இடங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.

பத்ரி பகுதி வளர்ச்சி அடைந்தால் ஷிர்டியின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என அந்நகர மக்கள் அச்சப்படுகிறார்கள். ஷிர்டியை போலவே சாய்பாபா பிறந்த பத்ரியும் வளர்ச்சியடைய வேண்டும். சாய்பாபாவின் பக்தர்கள் பத்ரிக்கும் வரவேண்டும். அதனாலேயே பத்ரியின் வளர்ச்சிக்காக முதல்வர் உத்தவ் தாக்கரே 100 கோடி நிதி அறிவித்துள்ளார். இதனால், ஷிர்டி மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு நிதிப்பற்றாக்குறை என எந்த பிரச்னையும் கிடையாது. அதனால், பத்ரிதான் சாய்பாபா பிறந்த ஊர் என்ற உண்மையை ஷிர்டி மக்கள் ஏற்க மறுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: