நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி: 4 பேரையும் பிப்.1ல் தூக்கில் போட புதிய உத்தரவு

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார, கொலை குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்தார். இதையடுத்துல குற்றவாளிகள் 4 பேரையும்  டெல்லி திகார் சிறையில் அடுத்த மாதம் 1ம் தேதி தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல், அவரை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளியது. படுகாயம் அடைந்த அவர், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த பலாத்கார கொலை வழக்கில், தொடர்புடைய ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மைனர் குற்றவாளி தண்டனையை நிறைவு செய்து விட்டான். மீதமுள்ள 4 குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படி டெல்லி நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், ஜனாதிபதிக்கு சில நாட்களுக்கு முன் கருணை மனுவை அனுப்பினார். இதற்கான பதில் வரும்வரை தூக்கு தண்டனையை ஒத்திவைக்கும்படி அவர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு செய்தார். இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் அரோரா, மரண தண்டனையை நிறைவேற்ற செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் நிலை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை, டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிய டெல்லி அரசு, அதை நிராகரிக்க பரிந்துரை செய்தது. இந்த மனுவை நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய டெல்லி துணை நிலை நிலை ஆளுநர், அதை நிராகரிக்கும்படி கூறியிருந்தார்.  உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நேற்று காலை, ஜனாதிபதிக்கு அனுப்பி அதை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்தது.

இதை ஏற்ற ஜனாதிபதி, முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நேற்றே உடனடியாக நிராகரித்தார். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற 14 நாள் இடைவெளி இருக்க வேண்டும். எனவே,   குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற புதிய உத்தரவு பிறப்பிக்கும்படி டெல்லி நீதிமன்றத்திடம் திகார் சிறை நிர்வாகம் மனு செய்தது. இதை ஏற்ற நீதிமன்றம், குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடும்படி நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தது.  இருப்பினும், இந்த தேதியிலும் தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

நிர்பயா தந்தை வரவேற்பு

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது பற்றி கருத்து தெரிவித்த நிர்பயாவின் தந்தை, ‘‘குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்தவுடனே அது நிராகரிக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். தற்போது குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதால், அவர்கள் தூக்கு தூக்கலிடப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது’’ என்றார். தாமதத்துக்கு டெல்லி அரசு காரணம் இல்லை நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை தாமதத்துக்கு டெல்லி அரசுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனைக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டே நிராகரித்து விட்டது. இதையடுத்து டெல்லி அரசு உடனடியாக செயல்பட்டிருந்தால், இந்நேரம் நிரபயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருப்பர்’’ எனத் தெரிவித்திருந்தார். நிர்பயாவின் தாய் அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2012ம் ஆண்டு டெல்லி தெருக்களில் போராடியவர்கள். இன்று அரசியல் ஆதாயத்துக்காக எனது மகள் மரணத்துடன் விளையாடுகின்றனர்’’ என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ‘‘கருணை மனுக்களை டெல்லி அரசு சில மணி நேரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டது. குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தாமதத்தில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை.  எங்கள் அரசு ஏன் தூக்கு தண்டனையை தாமதிக்க வேண்டும். குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். நிர்பயாவின் தாயை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர்’’ என்றார்.

Related Stories: