அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற போதிய நடவடிக்கை இல்லை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்துக்கு, இன்னும் போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவுக்கு, மத்திய அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநலன் வழக்கு மையம் சார்பில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காற்றில் மாசுவை கட்டுபடுத்துவதை தடுக்க, அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. பேட்டரிகளை முறையாக ரீசார்ஜ் செய்யும் வசதிகளை மேம்படுத்தப்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.

மாசு பாதிப்பை ஒழிக்க, மின்சார வாகன தொழில்நுட்பம்தான் சிறந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளை நீதித்துறை பாதுகாக்க வேண்டியது அவசியம். தேசிய மின் வாகன திட்டம்-2020 கடந்த 2015ம் ஆண்டே வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் 60 முதல் 70 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  ஆனால், 2 லட்சத்து 63 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து, இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

Related Stories: