கோவா தாது சுரங்க வழக்கில் வழங்காத தீர்ப்புக்கு பாராட்டு மத்திய அமைச்சர் சலசலப்பு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது தெரியவில்லை

பனாஜி:  கோவா இரும்பு தாது சுரங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பாத் நாயக் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையாகி இருக்கிறது.  கோவா மாநிலத்தில் இரும்பு தாதுவை வெட்டி எடுக்கும் 88 சுரங்க நிறுவனங்களின் உரிமத்தை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்பாக வெட்டி எடுக்கப்பட்ட இரும்பு தாதுக்களை பயன்படுத்த அனுமதிக்கும்படி சுரங்க நிறுவனங்களும்  மனு செய்தன.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், சுரங்க நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பாத் நாயக் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடாத நிலையில் அதனை வரவேற்று மத்திய இணை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளது நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், நாயக்கிற்கு பதில் அளிக்கும் வகையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுரங்க நிறுவனங்கள் இரும்பு தாதுவை பயன்படுத்துவது மற்றும் எடுத்து செல்வது தொடர்பான வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: