பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

கோவை: பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நடைபெற்றதாக தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினி பொய்யான தகவல்களை கூறி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 505 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திலும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajinikanth ,Periyar , Periyar, controversy, actor Rajinikanth, police, complaint
× RELATED அவிநாசி விபத்தில்...