காதலியை திருமணம் செய்ய முடியாததால் துப்பாக்கியால் சுட்டு இன்ஜினியர் தற்கொலை: திருச்சியில் பரிதாபம்

திருச்சி: பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில் காதலியை மணக்க முடியாத ஏக்கத்தில் இன்ஜினியர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ்நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. ஓய்வுபெற்ற மாநகராட்சி டிரைவரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கமலா சென்னையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். 2வது மனைவி ரெஜினாவுக்கு சசிக்குமார்(31) என்ற மகன் உள்ளார். பொறியியல் பட்டயப்படிப்பு (டிஎம்இ) முடித்த சசிக்குமார் வேலை தேடி வந்த நிலையில் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள இடத்தில் பேரல் சூட்டிங் அகாடமி என்ற துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையத்தை நடத்தி வந்தார். இதற்காக இவர் வீட்டில் பல பால்ரஸ் போட்டு சுடும் துப்பாக்கிகள் (பலூன்கள் சுடும் துப்பாக்கி) இருந்தது. சசிக்குமார் துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர். இதற்காக தேசிய அளவில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.

நேற்று காலையில் நல்லதம்பி வெளியே சென்று விட்டார். வீட்டில் ரெஜினா மட்டும் இருந்தார். அப்போது சசிக்குமார் தனது அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் அந்த அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக அவர் கதவை திறக்கும்படி சத்தம் போட்டார். ஆனால் கதவை திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது சசிக்குமார் நெற்றியில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிக்குமார் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து வந்த ஏர்போர்ட் போலீசார் முதல் கட்டமாக விசாரணை நடத்தியதில், சசிக்குமாருக்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ள நிலையில், தை மாதத்தில் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் சசிக்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தனது காதலியை கைவிட வேண்டிய நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: