பட்டிவீரன்பட்டி அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா: ஆண்கள் மட்டும் தட்டு சுமக்கும் வினோதம்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தினர் விவசாயம் செழிக்கவும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும் ஆண்டுதோறும் தை 3ம் தேதி வாழைப்பழங்களை சூறைவிடும் திருவிழா நடத்துகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக தங்களது வீடுகளில் கூடைகளில் வாழைப்பழங்களை நிரப்பி பூஜை செய்தனர். தொடர்ந்து ஊர் எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் இருந்து, பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி தலையில் வைத்து ஆண்கள் மட்டுமே சுமந்து வந்தனர்.

பின்னர் மேளதாளம் முழங்க ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, 300 ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் கோயின் மேற்புறத்திற்கு வாழைப்பழங்களை கொண்டு வந்து சூறையிடப்பட்டது. சுமார் 1 லட்சத்திற்கும் மேல் சூறையிடப்பட்ட வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக எண்ணி அனைவரும் எடுத்து சென்றனர். திருவிழாவில் சேவுகம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: