×

தமிழகத்தில் வெப்ப சலனம் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் காலை நேரங்களில கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளில் உறை பனியும் நிலவுகிறது. இந்நிலையில், பகல் நேரங்களில் வெயிலும் கொளுத்தி வருகிறது. காற்றில் ஈரப்பதம் ஓரளவுக்கு இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம்  இயல்பு நிலையை பாதித்துள்ளது.

இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் நேற்று ராமநாதபுரத்தில் பாம்பன் பகுதியில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இதுதவிர திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்துக்கும் குறைவாக குளிர்க்காற்று வீசியது. சில இடங்களில் மட்டும் 5 மிமீக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu ,heat rains , Tamil Nadu, hot weather, light rain, chance
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...