×

மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும்: ஏலத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 4 முறை ஏலங்கள் நடத்தப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது ஏலத்திற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,789 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்கள் இந்த 5வது ஏலத்தில் வழங்கப்பட உள்ளன. இவற்றில் 4,064.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் காரணமாக, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இத்தகைய சூழலில், தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முனைவது, தமிழகத்தின் சுற்றுச்சூழலைச் சிதைக்க நடத்தப்படும் தாக்குதல் என்பது மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5வது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு உரிமம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை அரசு ரத்து செய்யவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery Delta ,auction ,Ramadas ,cancellation , Hydro Carbon, Project, Cauvery Delta, Desert, Ramadas
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...