×

தமிழக பாஜ தலைவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்: தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என்று தேசிய பாஜ செய்தி தொடர்பாளர் கூறினார். தேசிய பாஜ செய்தி தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் நேற்று தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய குடியுரிமை சட்டம் குறித்து இதுவரை 255 பத்திரிகையாளர் சந்திப்புகள் நடந்துள்ளன. 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் 96 சதவீதம் உள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதியாக வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை பாஜ கொண்டு வரவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் முன்னெடுத்ததைதான் பாஜ செய்து முடித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தின் கீழ் வரமாட்டார்கள். அதற்கு வேறு சட்டம் உள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு, தேசிய குடியுரிமை பதிவு ஆகிய சட்டங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வராது. மாநில அரசு வலியுறுத்துவதை பொறுத்து இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை குறித்து முடிவெடுக்கப்படும். பல எதிர்கட்சிகள் சிஏஏக்கு எதிரான போக்கை மாற்றி கொண்டுள்ளனர். அதுபோல திமுக மாறியிருந்தால் வரவேற்கத்தக்கது.

என்ஆர்சி செயல்படுத்தப்படாது என கூறவில்லை, அனைத்து தரப்பின் கருத்தை கேட்டறிந்த பின் என்ஆர்சி கொண்டு வரவேண்டும். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது என்ஆர்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அடுத்த வாரம் தமிழக பாஜ தலைவர் நியமிக்கப்படுவார். என்பிஆரில் சில தொழில்நுட்ப கோளாறு இருக்கலாம், விரைவில் அது சரி செய்யப்படும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு உத்தரபிரதேச போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்புள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை மூட வேண்டும் என பாஜ தலைவர்கள் கூறியது அவர்களது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

* அறிவிப்பதில் இழுபறி ஏன்?
தமிழகத்தில் பாஜ தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில் 11 பேர் பட்டியல் மேலிட பார்வையாளர்களுக்கு அனுப்பப்பட்டு முக்கியமான நபர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லி தலைமை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், அவர் யார் என்ற அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தேசிய செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா பாஜ தேசிய தலைவராக வரும் 20ம்தேதி அறிவிக்கப்படுகிறார்.

தொடர்ந்து, 22ம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக தெரிகிறது. இவர் பதவி ஏற்பு நடைபெற உள்ளதால் தமிழக பாஜ தலைவர் அறிவிப்பு வெளியிடுவதில் தாதமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் பதவி ஏற்றதும் தமிழக தலைவர் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒருவரை தேர்வு செய்து விட்டதால் எந்நேரமும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவர் பதவிக்காக எச். ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், குப்புராம், ஏ.பி.முருகானந்தம், சி.பி.ராதாகிருஷ்னன், வானதி சீனிவாசன் என 11 பேர் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,Tamil Nadu , Interview with BJP leader, next week, national spokesperson,
× RELATED மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று...