அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி கோரிய வழக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: வரும் 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளின் கடனை சிறு குறு என்று பாரபட்சம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்கடன் மற்றும் நகை கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்னு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், “விவசாயிகளை சிறு, குறு என பிரித்து பார்க்கக்கூடாது. அதனால் தமிழக அரசின் இந்த அரசாணையால் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே ஒட்டு மொத்தமாக கடன்களை ரத்து செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு விவசாயிகளை சிறு குறு என்று பாகுபடுத்தாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை மூன்று மாதங்களில் விரிவுபடுத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும்தான் நஷ்டம் அடைகிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும்?. ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வங்கி கடனை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை, வட்டி விகிதம், இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆகியவை உட்பட அனைத்து உண்மை நிலவரத்தையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்’’ என தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் போபன்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முழு விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக மாநில அரசு நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அப்போது குறுக்கிட்ட விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த விசாரணை வரை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஏனெனில், வங்கி தரப்பில் விவசாயிகளுக்கு கடனை செலுத்த அழுத்தம் தரப்படுவதாக தெரிவித்தார். ஆனால் விவசாயிகள் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.

* தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ஒட்டுமொத்தமாக கண்டிப்பாக தள்ளுபடி செய்ய முடியாது என தமிழக அரசு முந்தைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்ய இருக்கும் எழுத்துப்பூர்வ அறிக்கையிலும் அதனையே குறிப்பிட மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: