தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த 12 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்ப்பு: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14ம் தேதி வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த 12 லட்சம் பேரின் வீடுகளுக்கே நேரில் சென்று சரிபார்க்கும் பணி நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படுகிறது. 2020 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கும் பணி தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் வருகிற 22ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் பெறப்படுகிறது.

அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக கடந்த 4, 5 மற்றும் 11, 12 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த 4 நாட்கள் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் அதிகம் பேர் கலந்துகொண்டு தங்கள் பெயர்களை சேர்க்கவும், முகவரி மாறியவர்கள் திருத்தம் செய்வதற்கும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 11 லட்சத்து 87 ஆயிரத்து 10 பேரும், நீக்கம் செய்ய 82,826 பேரும், திருத்தம் செய்ய 1,09,944 பேரும், முகவரி மாற்றம் செய்ய 93,589 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். குறிப்பாக 4ம் தேதி நடந்த முகாமில் 3,10,047 பேர், 5ம் தேதி 5,29,040 மற்றும் 11ம் தேதி 2,38,107, 12ம் தேதி 3,96,176 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற 22ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்த 12 லட்சம் பேரின் வீடுகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

அப்போது, விண்ணப்பம் கொடுத்த முகவரியில் அவர்கள் வசிப்பதை உறுதி செய்து கொள்வார்கள். மேலும், அவர்களின் பெயர் வேறு முகவரியில் இடம்பெற்றுள்ளதா என்றும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வந்து விசாரிக்கும்போது விண்ணப்பம் செய்தவரின் அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். தொடர்ந்து, வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் முதல் பிப்ரவரி மாதத்திற்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர் அல்லது மண்டல அலுவலகத்தில் படிவம் 001-ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

* சோழிங்கநல்லூர் அதிகம்

2020ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6,00,01,329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,96,46,287, பெண்கள் 3,03,49,118, மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி (6,46,073 வாக்காளர்கள்) உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக (1,69,620 வாக்காளர்கள்) துறைமுகம் தொகுதி உள்ளது.

Related Stories: