அலங்காநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டில் 4 பேர் பலி: காளைகள் முட்டி 300 பேர் காயம்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் உள்பட 2 பேர் இறந்தனர். திருச்சியில் மாடு உரிமையாளரும், சேலம் இடைப்பாடியில் வேடிக்கை பார்த்த வாலிபரும் பலியாகினர். இதுதவிர, பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 313 பேர் காயம் அடைந்தனர். அலங்காநல்லூரில் 16 காளைகளை அடக்கிய வீரர் முதல் பரிசாக காரை வென்றார். பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஜன. 15ல் மதுரை அவனியாபுரத்திலும், இரண்டாவதாக மாட்டுப்பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டிலும் அடுத்தடுத்து நடந்தன. இதனைத்தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான நேற்று, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 6 மணி தொடங்கி ஏற்கனவே வழங்கிய டோக்கன் எண்களின் வரிசையில், வாடிவாசல் பின்புறம் காளைகளுக்கு பரிசோதனை நடந்தது.

கால்நடை வட்டார டாக்டர் ராஜா தலைமையிலான குழுவினர் காளைகளை பரிசோதித்து தகுதிச்சான்று வழங்கினர். இதேபோல், களமிறங்கும் வீரர்களுக்கு அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. உயரம், எடை உள்ளிட்ட அளவுகள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் முனியாண்டி கோயில், காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில்களில் வெற்றி பெறும் வீரர்கள், காளைகளுக்கான பரிசு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு மேளதாளம் முழங்க கோயில் காளைகள் ஊர்வலமாக வாடிவாசல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன. சரியாக காலை 7.40 மணிக்கு அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி கோயில் திடலில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

முன்னதாக ஓய்வு நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில், மதுரை கலெக்டர் வினய் தலைமையில், அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டியில் 750 காளைகள் பதிவு செய்யப்பட்டன. 877 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதன்பின், 7.45 மணிக்கு தொடங்கி மாலை 5.10 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், 739 காளைகள் அவிழ்க்கப்பட்டன. போட்டி நடந்த 9 சுற்றுகளில் 688 பேர் பங்கேற்றனர். 16 காளைகளை அடக்கி: சிறந்த மாடுபிடி வீரராக அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் தேர்வானார்.

இவர் 16 காளைகளை அடக்கி முதல் பரிசாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார். கடைசி 9வது சுற்றில் களமிறங்கிய ரஞ்சித், ஒரு மணிநேரத்தில் 16 காளைகளை அடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ‘ரஞ்சித்’ என்ற இவரது பெயரிலேயே, இவரது தம்பி சுரேஷ், 21 காளைகளை அடக்கி பரிசு வென்று, அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக பாராட்டும் பெற்றார். கார் தவிர வீரர் ரஞ்சித் 10 தங்கக்காசுகள், வெள்ளி, டி.வி. உள்ளிட்ட பல பரிசுகளும் வென்றுள்ளார். அழகர்கோவில் அருகே உள்ள ராவுத்தர்பட்டியைச் சேர்ந்த கார்த்தி 14 காளைகளை அடக்கி 2வது பரிசாக டூவீலர் வென்றார். 3வது பரிசை மதுரை அரிட்டாபட்டி கணேசன் வென்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான பரிசு, குலமங்கலத்தைச் சேர்ந்த மதிமுக மாவட்ட செயலாளரான மாரநாடு என்பவரது காளை வென்றது. இவருக்கு கார் மற்றும் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 4 கறவை பசு மாடுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை, மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவுக்கான காளை 2வது பரிசையும், மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி கார்த்திக் என்பவரது காளை 3ம் பரிசையும் வென்றன. 2 பேர் பலி: ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். சோழவந்தானை சேர்ந்த ஸ்ரீதர் (24) பி.இ. முடித்துவிட்டு, ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார். ஜல்லிக்கட்டுக்காக தனது காளையை பிடித்து நின்றிருந்தார். அப்போது, வாடிவாசல் அருகே பின்னால் நின்றிருந்த காளை மிரண்டு முட்டியதில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அதிக ரத்தப்போக்கால் பரிதாபமாக இறந்தார். இதேபோல், பார்வையாளரான செக்கானூரணி செல்லப்பாண்டி (35) மயக்கம் வந்ததால், அருகில் ஜூஸ் குடிக்க  சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

காளை மிதித்ததில் உரிமையாளர் பலி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரங்காடு பொன்னர்-சங்கர் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. உள்ளூர், வெளி மாவட்டங்களை சேர்ந்த 595 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்க 295 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதும் காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது மாடு உரிமையாளர் புதுக்கோட்டையை சேர்ந்த பழனியாண்டி (55) என்பவர் மாடு பிடிக்கும் இடத்தில் தனது மாட்டை பிடிக்க கையிறு போட்டபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அவரை மற்றொரு காளை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதவிர, காளைகளை வீரர்கள் போட்டி போட்டு பிடிக்க முயன்றபோது 52 பேர் காயமடைந்தனர். போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிகாசு, கட்டில், சில்வர் குடம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வேடிக்கை பார்த்த வாலிபர் பலி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வேம்பனேரி அய்யனாரப்பன் கோயிலில் எருதாட்டம் நடந்தது. போட்டியில் 200 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க 600 வீரர்கள் களமிறங்கினர். காளைகள் வரும் பாதையின் இருபுறத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிகழ்ச்சியை ரசித்தபடி இருந்தனர். அப்போது, மோட்டாங்காடு பகுதியை சேர்ந்த உத்திரகுமார் (21) என்பவரை மாடு முட்டி தள்ளியதில் இறந்தார். வீரர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதேபோல், கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் 14 பேர் உள்பட 45 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் 29 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிராவயலில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 90 பேரும், திருப்பத்தூர் மாவட்டம் பெரியகசிநாயக்கன்பட்டியில் நடந்த எருதுவிடும் விழாவில் 60 பேரும் காயமடைந்தனர்.

* இழப்பீடு வாங்கி தரணும் நீதிபதி கருத்து

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஓய்வு நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடந்தது. அவர் கூறுகையில், ‘‘நல்ல நிகழ்ச்சியில் ஒரு துயர சம்பவம். பலியான வாலிபருக்கு இழப்பீடு கிடைக்க தமிழக அரசிடம் எடுத்துக் கூறி அதிகபட்ச இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இழப்பீடு கிடைக்காவிட்டால், கட்சியிலிருந்தாவது உரிய நிதி வழங்கிட வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

* 2 முறை போலீஸ் தடியடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் 2 முறை போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. காளைகள் வரிசையாக சென்றபோது, விஐபி டோக்கன் பெற்ற காளைகள் எனக்கூறி சிலர் தடுப்புகளை கழற்றி தங்கள் காளைகளை உள்நுழைத்து கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பி வாக்குவாதம் நடந்தது. பின்னர் தடியடி நடந்தது. இதேபோல், வெளிநாட்டினர், விஐபிகளை கேலரியில் ஏற்றாமல் நிறுத்தி வைத்திருந்ததில், போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளுவை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.

* ஓபிஎஸ் குடும்பத்துக்கு கேரவன் வசதி

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார் தனது குடும்பத்தினருடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண வந்திருந்தார். விஐபி கேலரியில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். முன்னதாக, ஓபிஎஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக ‘ஏசி’ வசதியுடன் கூடிய கேரவன் வாகனம் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தில் தங்கியிருந்து, அவ்வப்போது கேலரிக்கு வந்து ஜல்லிக்கட்டை குடும்பத்தினர் பார்வையிட்டு திரும்பினர்.

* அமைச்சர் காளைகளுக்கு பரிசு டிடிவியின் காளை பிடிபட்டது

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘சின்ன கொம்பன்’ காளை காலையிலேயே களமிறங்கி நின்று விளையாடியது. யாரிடமும் பிடிபடவில்லை. மாலையில் அவரது வெள்ளைக்கொம்பன், கருப்பு கொம்பன் ஆகிய 2 காளைகளும் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையிலேயே அவிழ்த்து விடப்பட்டது. பிடிபடாத இந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டமானுக்கு சொந்தமான 6 காளைகள் ஜல்லிக்கட்டில் களமிறக்கப்பட்டன. அனைத்து காளைகளுமே வீரர்களிடம் பிடிபடாமல் தப்பித்தது. இதேபோல டி.டி.வி.தினகரனின் காளை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் காளைகள் பிடிபட்டன.

* இங்கிலாந்து தம்பதி வியப்பு

சிராவயல் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்த இங்கிலாந்தை சேர்ந்த கேரி தம்பதியினர் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காகவே இந்தியா வந்தோம். இவ்வளவு பெரிய திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இது மாதிரியான நல்லதொரு வீர விளையாட்டை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாகவும். ஆச்சர்யமாகவும் உள்ளது’’ என்றனர்.

Related Stories: