திருவில்லிபுத்தூரில் களைகட்டிய வழுக்குமரம் ஏறும் போட்டி

திருவில்லிபுத்தூர், : பொங்கல் விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் வழுக்குமரம் ஏறும் போட்டி களைகட்டியது. ஒவ்ெவாரு ஆண்டும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் கொலூர்பட்டி தெருவில் நிகழ்ச்சிகள் களைகட்டும். விழித்தெழு இளைஞர் பாரதம்  அமைப்பின் சார்பில் 12ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. பொங்கல் தினத்தன்று ஒயிலாட்டம், மயிலாட்டம், தீப்பந்த நடனம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது நாளாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று கொலூர்பட்டி மைதானத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

இதற்காக சுமார் 30 அடி உயரத்திற்கு வழுக்குமரம் ஊன்றப்பட்டது. பின்னர் அதில் இளைஞர்கள் ஏற முடியாத அளவில் விளக்கெண்ணெய் அதிக அளவில் தடவப்பட்டது. வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வைத்து கட்டப்பட்டிருந்தது. பின்னர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழு குழுவாக வழுக்கு மரம் ஏற துவங்கினர். நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி  5 மணிக்கு நிறைவடைந்தது.

இளைஞர்கள் 3 மணி நேரம் போராடி வழுக்கு மரத்தில் ஏறி பரிசுத்தொகையை எடுத்தனர். வழுக்கு மரத்தில் ஏறும்போது சுற்றியிருந்தவர்கள் மரத்தில் ஏற முடியாத அளவிற்கு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் திரண்டிருந்த கூட்டத்தினர் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை காண்பதற்காக பட்டிதெரு மட்டுமில்லாது திருவில்லிபுத்தூர் நகரத்திலுள்ள பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள் பரிசுத்தொகை எடுத்துச்சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொலூர் பட்டி திருவிழா நிர்வாகிகள் செய்திருந்தனர். நகர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags : Tiruviliputhur ,Weedy Bald Tree Climbing Competition , Thiruvilliputtur, bald, climbing, competition
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே கரும்பு காட்டில் பயங்கர தீ விபத்து