×

களை கட்டும் காணும் பொங்கல்; கிண்டி, வண்டலூர், மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: இன்று காணும் பொங்கலை முன்னிட்டு,சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடி கொண்டாடி வருகின்றனர். மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5 ஆயிரம் போலீசாரும், இதர பொழுதுபோக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வாக்கி டாக்கி, மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் ஆயுதப்படையின் குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 7 வண்டிகள் ஈடுபடுகின்றன.

கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகளை உடனே அடையாளம் காண  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதாவது கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைப்பேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு கடற்கரைக்குள் செல்ல வேண்டும். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் அரசு சுற்றுலா பொருட்காட்சி, ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.


Tags : crowds ,Weed ,Vandalur ,Kindi ,Marina ,Chennai ,Meeting ,Pongal ,Kindi Children's Park , Chennai, Marina Beach, Kindi Children's Park, Vandalur, Pongal, Pongal 2020, Public Meeting
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்