குஜிலியம்பாறை அருகே தனியார் தோட்டத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது : 1,160 மது பாட்டில்கள் பறிமுதல்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே தனியார் தோட்டத்தில் போலி மதுபானம் தயாரித்து விற்ற தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார்  கைது செய்தனர். 1,160 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் கடகால்புதூரில்  உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி சக்திவேல்  உத்தரவுப்படி, திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி பொன்னுச்சாமி, வேடசந்தூர் டிஎஸ்பி இளவரசன் தலைமையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா,  எஸ்ஐ தாவூத்உசேன், குஜிலியம்பாறை எஸ்ஐ செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தோட்டத்து வீட்டில்  அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது தோட்டத்து வீட்டில் 29 அட்டை பெட்டிகளில் இருந்த 1,160 போலி மது பாட்டில்கள், 100 அட்டை பெட்டிகளில் காலி பாட்டில்கள், மூடிகள்,  ஸ்டிக்கர்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல்  செய்தனர். இதுதொடர்பாக கரூரை சேர்ந்த பிச்சைமுத்து, அவரது மகன் சிவா, இவரது கூட்டாளி சுரேஷ் (47) ஆகியோரை கைது செய்தனர். மேலும்  இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ‘‘கரூர் மாவட்டம், அருகம்பாளையத்தை சேர்ந்தவர்  பிச்சைமுத்து (65). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் கடகால்புதூரில் 4 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

அதில் வீடு கட்டியும், தென்னை, கொய்யா, முருங்கை உள்ளிட்ட விவசாயத்தை செய்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக கரூர், புதுச்சேரியை  சேர்ந்த சிலருடன் சேர்ந்து தோட்டத்து வீட்டில், போலி மதுபானம் தயாரிக்கும் பணிக்கு உபகரணங்களை நிறுவியுள்ளனர். பின்னர் ஸ்பிரிட் எரிசாராயம்,  எசன்ஸ், கலர் ஆகியவற்றை கொண்டு போலி மதுபானங்களை, பாட்டில்களில் பிரபல மது நிறுவன பெயர்களில் ஸ்டிக்கர் ஒட்டி மற்ற  வெளியிடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர். பிச்சைமுத்துவின் மகன் சிவா (32), கரூரில் நடத்தி வந்த மைக்செட் கடையை, இந்த  தோட்டத்து வீட்டிற்கு மாற்றியுள்ளனர். விசேஷங்களுக்கு வாகனங்களில் மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதை போல, போலி  மதுபானங்களை வெளியே கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர்’’ என்றனர்.

Related Stories: