நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று இப்போது வெளியில் உள்ளான். எஞ்சிய முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இவர்களுக்கு வரும் 22ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, முகேஷ் தாக்கல் செய்த கருணை மனுவை டெல்லி துணைநிலை கவர்னர் நிராகரித்தார். இதனிடையே தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, முகேஷ்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பினார். இந்த கருணை மனுவை குடியரசு தலைவருக்கு உள்துறை அமைச்சகம் இன்று காலை அனுப்பி வைத்தது. அப்போது இந்த கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். 

Related Stories: