ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரை கடத்தி வந்த மாணவன் உள்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், தி.நகர் கண்ணம்மாபேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் நவீன் (19) மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும்  அரிகிருஷ்ணன் (23) என தெரியவந்தது.

சிக்கிய நவீனின் நண்பர் தமிழா (23). தமிழாவின் உத்தரவின் பேரில் நவீன், சத்தியா (20), அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் பிடிபட்டனர் என தெரியவந்தது. ஆந்திராவில் ஒரு மாத்திரை ரூ.28க்கு வாங்கி வந்து சென்னையில் ஒரு மாத்திரை ரூ.150க்கு விற்றுள்ளனர். மேலும் தப்பி ஓடிய தமிழா, சத்தியா ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர்களுக்கு போதை கும்பலுடன் தொடர்புள்ளதா எனவும்  விசாரிக்கின்றனர்.

Related Stories: