×

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி அரசுக்கு ரூ.1.47 லட்சம் கோடியை ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி வோடபோன், ஏர்டெல், டாடா நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேற்கண்ட 3 நிறுவன பாக்கி ரூ.1.02 லட்சம் கோடி பாக்கி உட்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடியை ஒரு வாரத்தில் அரசுக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளது. ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம், சொத்து வருமானம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும் என தெரிவித்திருந்தது.

இதன்படி வோடபோன் ரூ.53,039 கோடி, ஏர்டெல் ரூ.35,000 கோடி, டாடா டெலசர்வீசஸ் ரூ.13,823 கோடி செலுத்த வேண்டியிருந்தது. இந்த 3 நிறுவனங்களும் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ.அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஒரு வாரத்தில் நிலுவை தொகையை செலுத்த உத்தரவிட்டனர். எனவே, மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் ஒரு வாரத்துக்குள் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி செலுத்த வேண்டும். இதுதவிர ஜியோ (ரூ.16,456 கோடி), (பிஎஸ்என்எல் ரூ.2,098 கோடி உட்பட பிற நிறுவனங்கள் சேர்த்து மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும். இது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* வோடபோன் மூடப்படுமா?
ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக வோடபோன் ஐடியா நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஏற்கெனவே அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசிடம் கேட்ட உதவி கிடைக்கவில்லை என்றால், இந்தியாவில் வியாபாரத்தை நிறுத்துவதை தவிர வேறு வழி கிடையாது’’ என்று தெரிவித்திருந்தார். முழு தொகையையும் இப்போதே செலுத்த நிர்பந்தித்தால், நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என இந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக சீராய்வு மனு தாக்கல் செய்வதுதான் நிறுவனங்களுக்கு ஒரே வாய்ப்பு என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஜூலை- செப்டம்பர் காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50,922 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* அரசு உதவ கோரிக்கை
வோடபோன் நிறுவனம் அழிவின் விளிம்பில் உள்ளது. அரசு கைகொடுக்காவிட்டால் இந்த நிறுவனம் மூடப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. எனவே, அரசு கண்டிப்பாக இந்த நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஏராளமானோர் வேலை இழப்பார்கள். வெளிநாட்டவர் இனி இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் நிலை உருவாகும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரியுள்ளன.

Tags : Supreme Court ,telecom companies , Telecom company, petition dismissed, govt, Rs 1.47 lakh crore, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...