தேசிய தலைவர் தேர்வு நடப்பதால் தமிழக பாஜவுக்கு இன்று புதிய தலைவர் அறிவிப்பு?: தூக்கத்தை தொலைத்த விஐபிக்கள்

சென்னை: பாஜவின் தேசிய தலைவர் தேர்தல் 19ம் தேதி நடைபெறுவதால், தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜவின் தமிழக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர், கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தமிழகத்தில் பாஜவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில்கட்சியின் தேர்தலை நடத்த பாஜ தலைமை உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும். கடந்த 5ம் தேதி புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இதற்கிடையில், பாஜவின் தேசிய தலைவர் தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இதனால், காலியாக உள்ள மாநில தலைவர் பதவிகளை நிரப்பும் வேலைகளில் கட்சியின் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று முன்தினம் மிசோராம் மாநில தலைவர் அறிவிக்கப்பட்டார். நேற்று புதுவை, மேற்கு வங்கத்திற்கு மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குத்தான் தலைவர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: