பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளை அடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம்: புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று நடக்கிறது

அலங்காநல்லூர்: பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து ஆவேசமாக வந்த காளைகள் முட்டித்தள்ளியதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளையர்கள் காயமடைந்தனர். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. பொங்கல் தினமான ஜன.15ல் இந்த ஆண்டின்  முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.  ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம்  தலைமையில், கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,  மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் கிராமத்தினர் கொண்ட குழுவினர் போட்டியை  துவக்கினர். இதில், 641 காளைகள் பங்கேற்றன. 607 மாடுபிடி வீரர்கள் கலந்து  கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஆவேசமாக வெளியேறிய காளைகள் முட்டித் தள்ளியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 71 பேருக்கு காயம் ஏற்பட்டது.  இவர்களில் அழகர் என்ற வீரர் கவலைக்கிடமான நிலையில் மதுரை அரசு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.  இதையடுத்து மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக, நேற்று காலை கிராம மகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் மேளதாளம் முழங்க, காளைகளுக்கு அணிவிக்கப்படும் வேட்டி, துண்டு உள்ளிட்ட பரிசு பொருட்களை மாலைவிநாயகர் கோயிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பாலமேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 675 காளைகளுக்கு கால்நடை டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் உடல் தகுதி சோதனை நடத்தினர். பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ குழுவினர் 936 மாடுபிடி வீரர்களை பரிசோதித்து அனுமதித்தது.

காலை 8.40 மணிக்கு அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வு நீதிபதி மாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து, ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். கோயில் காளைகளை தொடர்ந்து, ஒரு சுற்றுக்கு 75 பேர் வீதம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்க முயன்றனர். வென்ற காளையர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு டூவீலர்கள், பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணிக்கு  நூற்றுக்கணக்கான காளைகள் மீதமிருந்தன. எனவே, கோரிக்கையை ஏற்று ஓய்வு நீதிபதி மாணிக்கம், ஒரு மணி நேரம் கூடுதலாக நடத்த அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது.

காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர். இவர்களில், 6 பேர், அதிக காயங்களுடன் மதுரை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 முறை போலீசார் தடியடி: பாலமேடு ஜல்லிக்கட்டில் சிலர், ‘விஐபிகளுக்கான அனுமதி பெற்ற காளைகள்’ எனக்கூறி உள்ளே கொண்டு வந்தனர். இதற்கு வரிசையில் நின்றிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீண்டும் மதியம் 2.30 மணிக்கும் விஐபி காளைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தடியடி நடந்தது. இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘முக்கிய பிரமுகர்கள் முதல் நூறு டோக்கன்கள் வரை வாங்கி வைத்து, தெரிந்தவர்களின் மாடுகளை முதலில் அனுமதிக்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது’’ என்றனர்.

இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு : உலகப்புகழ் மிக்க அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதற்கென 820 வீரர்கள், 700 காளைகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடல் வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வெளிமாவட்ட, வெளிநாட்டினருக்கென தனி மேடை,  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகளுக்கு தனி மேடை, இலவச பார்வையாளர் மேடை அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கிமீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இரண்டடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை: திருச்சி மாவட்டத்தில் பெரியசூரியூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 610 காளைகளுடன் 334 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளை முட்டியதில் 29 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் 357 காளைகள் பங்கேற்றன. 120 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க போட்டியிட்டனர். இதில் 16 பேர் காயமடைந்தனர்.

கேலரியை ஆக்கிரமித்த காவலர் குடும்பங்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதன்முறையாக ‘காவலர் அலுவலர்கள்’ என்ற பெயரில் போலீசார் தங்களுக்கு ஒரு கேலரி அமைத்திருந்தனர். இதில் 50க்கும் அதிக இருக்கைகளில் அவர்களது உறவினர்கள், நண்பர்களே ஆக்கிரமித்திருந்தனர். மேலும், அமைச்சர் உள்ளிட்ட விஐபிக்கள் அமரும் மற்றொரு மேடையில் விழா கமிட்டி தலைவர் ஆர்டிஓ முருகானந்தத்தை, அனுமதிக்க போலீசார் மறுத்தனர். வருவாய்த்துறையினர், தலையிட்டு கூறியபிறகே அவருக்கு அனுமதி கிடைத்தது. மேடையில் அமைச்சருடன், ஐஜி, டிஐஜி, கமிஷனர், எஸ்பி என போலீஸ் அதிகாரிகளே இருந்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் அரிட்டா பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி, காவ்யா  ஆகிய இரு இளம் பெண்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை தாங்களே நடத்திக் கொண்டு  வந்திருந்தனர்.

காளை முட்டி வீரரின் கண் பார்வை பாதிப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 5வது சுற்றின்போது சோழவந்தான் குருவித்துரை வீரர் ராஜா என்பவரை காளை முட்டியதில், அவரது இடது கண் சேதமடைந்து, ரத்தம் கொட்டியது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதிக சேதத்தால், பார்வை பாதிப்பு ஏற்படலாம் என்று டாக்டர்கள் அச்சம் தெரிவித்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை மதுரை ஜெய்ஹிந்த்புரம் விஜய்(24) பெற்றார். அவருக்கு திமுக எம்எல்ஏ சரவணன் டூவீலர் பரிசாக கொடுத்தார். இதேபோல், களத்தில் நின்று கலங்கடித்த முதல் காளையாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை தேர்வானது. 2வது பரிசை மதுரை வில்லாபுரம் காந்தியின் காளையும், 3வது பரிசை அன்புராணியின் காளையும் வென்றன.

காளை முட்டி விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில், சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை பார்வையாளர் கூட்டத்திற்குள் புகுந்து விவசாயி முருகன்(40), பெருமாள்(65) ஆகியோரை முட்டி தூக்கி வீசியது. காயமடைந்த இருவரும்  அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முருகன் உயிரிழந்தார்.

Related Stories: