சீனா, பாகிஸ்தான் தீர்மானம் 3வது முறையாக தோல்வி ஐ.நா.வில் எங்கள் கொடி உயரமாக பறக்கிறது: இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் ட்விட்

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் 3வது முறையாக ஐ.நா-வில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் வெளியிட்ட ட்விட்டில், ‘ஐ.நா-வில் எங்கள் கொடி உயரமாக பறக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான மாலி தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க ஐ.நா சாபையின் மூடிய கதவு கூட்டம் நடைபெற்ற போது, ​சீனா தரப்பில் காஷ்மீர் பிரச்சினை குறித்து வேறொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் விவாதிக்க கோரிக்கை விடுத்தது. அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ​​இவ்விவகாரம் தொடர்பாக சீனா, ஆகஸ்ட் 2019 முதல் தற்போது மூன்றாவது முறையாக, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபையில் கொண்டு வந்தது.

இதை பிரான்ஸ் எதிர்த்தது. அதன்படி, நேற்று காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாதுகாப்பு கவுன்சிலை முயன்ற போது, சீனாவும் பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்டன. பிரான்ஸ் மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன், காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என்று ஒரு பொதுவான கருத்து கூறப்பட்டதால், சீனா, பாகிஸ்தான் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அதேபேரம், இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கு ரஷ்யா உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ‘கடந்த 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999ம் ஆண்டு லாகூர் பிரகடனத்தின் அடிப்படையில் இருதரப்பு முயற்சிகள் மூலம் அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று ரஷ்யாவின் ஐ.நா. பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில், ஐ.நா-வின் இந்திய தரப்பு நிரந்தர பிரதிநிதி, தூதர் சையத் அக்பருதீன் முக்கியமான கருத்தை தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதில், ‘ஐ.நா-வின் ஒரு உறுப்பு நாடு மேற்கொண்ட முயற்சி மற்ற அனைவரால் புறக்கணிக்கப்பட்டதை நாங்கள் மீண்டும் கண்டோம். பாகிஸ்தானின் பிரதிநிதிகளால் வரையப்பட்ட எச்சரிக்கை சூழ்நிலையோ அல்லது அரங்கில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பலமுறை கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தது அல்ல என்று கண்டறியப்பட்டது. இந்த முயற்சி ஒரு கவனச்சிதறலாக கருதப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை எழுப்பவும் தீர்வு காணவும் இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்று பல நாடுகளால் சுட்டிக்காட்டப்பட்டது’ என்றார். தொடர்ந்து அக்பருதீன் வெளியிட்ட ட்வீட் பதிவில், ‘இன்று ஐ.நா மன்றத்தில் எங்கள் கொடி உயரமாக பறக்கிறது; தவறான கொடியை பறக்கவிட்டவர்களின் முயற்சிக்கு எங்களது பல நண்பர்களிடமிருந்து கடுமையான பதில் கிடைத்தது’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, சீன தூதர் ஜாங் ஜுன் கூறுகையில், “நாங்கள் ஜம்மு-காஷ்மீர் குறித்து ஒரு சந்திப்பை நடத்தினோம். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதங்களை எழுதியதை பாதுகாப்பு சபையின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய நிலைமையை கேட்டோம்’ என்றார். பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்கு காரணம், லடாக் பகுதி சீன எல்லையில் உள்ளதால் தொடர்ந்து இப்பிரச்னைக்கு சீனா ஐ.நா-வில் குரல் எழுப்பி வருகிறது. லடாக்கின் பல பகுதிகளுக்கு சீனா உரிமை கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: