உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும்: ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஸ்ரீபெரும்புதூர்: உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும் என்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, மனோகரன் முன்னிலை வகித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவை முன்னிட்டு வழி நெடுகிலும் வாழை, மா இலை, கரும்பு மற்றும் பழவகையினை தோரணமாக அமைத்திருந்தனர். பரதநாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவை துவக்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இதை, தமது இல்லத்தில் நடக்கும் விழாவாக பார்க்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும்பட்சத்தில், நாம் வெற்றி பெறுவது உறுதி. 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெற்றிருந்த தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் பல அக்கிரமங்கள் நடந்ததாலும். அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம். நாம் நீதிமன்றத்தை நாடியதால் வெற்றியை பெற்றோம். இருப்பினும் தமிழகத்தில் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், பெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி உள்பட பல கலந்து கொண்டனர்.

Tags : elections ,Pongal ,DMK ,speech ,MK Stalin ,Sriperumbudur , DMK ,100 per cent ,local elections , MK Stalin's speech, Sriperumbudur
× RELATED தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்...