மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொடூர கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி குடியிருப்பில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆடைகளின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்துவிட்டு விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். கடந்த 14ம் தேதி இரவு மதுபோதையில் வந்த 2 நபர்கள் அப்பெண்ணை பாழடைந்த ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கல்லால் முகத்தில் சரமாரியாக தாக்கி முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். முகம் சிதைந்துள்ளதால் பெண்ணின் அடையாளம் குறித்து கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக விரோதிகளின் கூடாரம்

விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அங்கு போதிய பாதுகாப்பு வசதி, போலீஸ் ரோந்து இல்லாததால் பாழடைந்த குடியிருப்புக்குள் சூதாட்டம், மது விருந்து போன்ற சமுக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சமுக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாழடைந்த குடியிருப்புகளை இடித்து அகற்ற வேண்டும். போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: