கடன் வாங்கி தருவதாக கூறி வீட்டுமனை எழுதி வாங்கிய போலி போலீஸ் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (36). கெமிக்கல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷோபனா (31). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஷோபனா அவரது தாய் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலி வீட்டுமனையில் வீடு கட்ட வங்கி மூலம் கடன் வாங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த 10 மாதத்துக்கு முன்பு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (33) என்பவர், தன்னை போலீஸ் என்று ஷோபனாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, நான் எந்த வங்கியில் கடன் கேட்டாலும் தருவார்கள் என கூறினார்.

இதனால், அவரிடம் வீட்டுமனை பத்திரத்தை ஷோபனா கொடுத்தார்.அதை வைத்து அந்த வீட்டுமனையை சிவக்குமார் அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதையறிந்த ஷோபனா சிவக்குமார் பற்றி விசாரித்தபோது, அவர் போலீஸ் இல்லை என்பதும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஷோபனா, சிவக்குமாரிடம் வீட்டு பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றி தருமாறு கூறி நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சிவக்குமார், ஷோபனாவை தகாத வார்த்தையால் திட்டி, சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஷேபானா நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

Related Stories: