×

பிற மாநிலங்களில் லோக் ஆயுக்தா எவ்வாறு நியமிக்கப்பட்டது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்க : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை:   லோக் ஆயுக்தா அமைப்பு பிற மாநிலங்களில் எவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய விசாரணையில்....

தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிராஜூதீன் வாதத்தில், லோக்பால் சட்டத்தில் 5 பேர் கொண்ட குழு தலைவரையும் உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கிறது, அந்த குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், சட்ட நிபுணர் ஆகியோர் இடம்பெறுவர். ஆனால் தமிழக லோக்ஆயுக்தா 2018 சட்டத்தில், அந்த உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் குழுவில், மாநில முதல்வர், எதிர்கட்சி தலைவர், சபாநாயகர் மட்டுமே உள்ளனர். இதில் முதல்வருக்கு அதிகார பலம் உள்ளதால் தனக்கு ஆதரவானவர்களை தேர்வு செய்து முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. அதனால் லோக்ஆயுக்தாவை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்.

இதற்கு மாநில அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 இதையடுத்து பிற மாநிலங்களில் எவ்வாறு லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும், மேலும் இதுபோன்ற வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவையோ அல்லது வழிகாட்டு முறைகளையோ வழங்கியுள்ளதா என்பது குறித்தும் மனுதாரர் மற்றும் தமிழக அரசு ஆகியோர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை  ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

வழக்கின் பின்னணி

*முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 4 மாதத்தில் உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 11ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

*இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும்,  நீதித்துறையை சார்ந்திராத ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

*இந்த நிலையில் ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு  புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு  மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களின் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

* இந்த நிலையில் ராஜேந்திரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், “தமிழகத்தில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இது மாநிலத்தில் ஊழல் செய்பவர்களை காப்பாற்றும் விதமாகத்தான் உள்ளது. மேலும் சட்டம் என்பது சக்தி இல்லாத ஒரு அமைப்பாகத் தான் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

*இந்த அமைப்பில் விசாரிக்கப்படும் குற்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அதில் உள்ள உறுப்பினர்களே அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் அதிகாரம் கிடையாது. மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தான் மாற்றி அமைக்க வேண்டும். இதை தவிர வேறு வழியே கிடையாது. அதனால் பல்வேறு குளறுபடிகள் கொண்டுள்ள இந்த அமைப்பை முழுமையாக தமிழகத்தில் ரத்து செய்துவிட்டு புதிய சட்டத்தை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

* இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : states ,Lokayukta ,State Supreme Court , Lok Ayukta, Government of Tamil Nadu, Supreme Court, Order
× RELATED சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்