மழையின்றி கருகி வரும் மிளகாய், நிலக்கடலை பயிர்கள்: விலைக்கு தண்ணீர் வாங்கும் அவலம்

சாயல்குடி: சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி நிலக்கடலை, மிளகாய் பயிர்கள் கருகி வருவதால், அவற்றை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி தூர்களில் தெளித்து வருகின்றனர். கடலாடி தாலுகாவில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை பயிரிடப்படுகிறது. சாயல்குடி அருகே உள்ள இதம்பாடல், எஸ்.தரைக்குடி, டி.எம்,கோட்டை, பெருநாழி, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரிசல் மண் நிலத்தில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் விவசாயிகள் மிளகாய், மல்லி, நிலக்கடலை ஊடு பயிராக வெங்காயம் போன்ற பயிர்களை பயிரிட துவங்கினர். களையை அகற்றுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.

இதனால் பயிர்கள் வளர துவங்கியது. ஆனால் தற்போது மழை பெய்யாததாலும், கண்மாய், குளங்களில் போதிய மழை தண்ணீர் தேங்காததாலும் பயிர்கள் வெயிலுக்கு கருகி வாட துவங்கியது. இதனால் கடனுக்கு பணம் வாங்கி செலவழித்து காய் காய்க்கும் தருவாயில் கருகி வரும் செடிகளை காப்பாற்ற, டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, அதனை கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வருகின்றனர். ஆனால் செடிகள் நல்லமுறையில் வளராமல் வாடி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே வரும் காலங்களில் விவசாயம் செழிக்க, தண்ணீரை சேமிக்க இப்பகுதியின் நீர்ஆதாரமான கஞ்சம்பட்டி கால்வாயை தூர்வாரி, கண்மாய், குளங்களை மராமத்து செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: