11 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜிடிபி மாபெரும் சரிவு: ரூ.5 லட்சம் கோடி பொருளாதாரம் மாயை!...மக்களிடம் வெறும் கனவுகளை மட்டும் விற்கிறதா மத்திய அரசு?

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தான் அந்த நாடு வளமாக இருக்கிறதா, எல்லா துறைகளிலும் வளர்கிறதா, வேலைவாய்ப்பு பெருகி, கைநிறைய சம்பாதித்து, விலைவாசி கையை கடிக்காமல் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்பதற்கான அளவுகோல். மத்தியில் பாஜ அரசு வந்ததில் இருந்து ஜிடிபி வளர்ச்சி கேள்விக்குறியாகவே உள்ளது. தேய்ந்து, தேய்ந்து கடைசியில் 2019-20க்கான எதிர்பார்ப்பு, கடந்தாண்டு 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டாண்டு ஏறித்தானே இருக்க வேண்டும் மதிப்பீடு? ஏன் இந்த அவலம்?

* கார் உற்பத்தி உட்பட எல்லா துறை நிறுவனங்களின் உற்பத்தி முடங்கி, விற்பனை படுத்துவிட்டது.

* திருப்பூர் உட்பட பல தொழில் நகரங்களில் வேலையில்லாமல் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர்.

* சாப்ட்வேர் மட்டுமல்ல, சாதாரண தொழிற்சாலைகளிலும் கூட ஆயிரக்கணக்கில் பணியாட்கள் நீக்கப்படுகின்றனர்.

* உற்பத்தி முடங்கி, ஜிடிபி குறைந்து, அதனால் வரி வருவாய் சரிந்து கிடக்கும் அரசுக்கு எதை விற்றால் பணம் கிடைக்கும் என்ற பரிதாப நிலை. அதனால், ஏர் இண்டியா முதல் பிஎஸ்என்எல் வரை விற்கப்படுகிறது.

* அப்படியும் பணம் போதாமல், அரசு நிறுவனங்களின் அசையா சொத்துக்களை விற்பதற்கும் துணிந்துவிட்டது அரசு.

இப்படிப்பட்ட படுகுழியில் தள்ளியது யார் என பொருளாதார நிபுணர்களே குழம்பிப்போயுள்ளனர். அதிகரித்து வரும் வேலையிழப்புகளை கண்டு, நமக்கு இனிமேல் வேலை கிடைக்குமா என்ற பெரும் பீதியுடன் உள்ளனர் இளைஞர்கள்.

போதாக்குறைக்கு வெளிமாநில இளைஞர்கள் வேறு நாள்தோறும் அணிஅணியாக வந்து குவிந்து வேலைவாய்ப்புகளை தட்டிப் பறிக்கின்றனர். இதை தடுக்க, ஆந்திரா, கேரளா, கர்நாடக அரசுகள் குறிப்பிட்ட சதவீதம் வரை சொந்த மாநில இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 60 சதவீதம் வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் என்று வேலைவாய்ப்பில் உறுதி அளித்துள்ளது அரசு. ரூ.5 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு பிரகடனப்படுத்தியது வெறும் கற்பனையா? கனவுகளை மக்களிடம் விற்பனை செய்வது இப்போது அம்பலமாகி விட்டதா? எதிர்கால இந்திய பொருளாதாரம் கேள்விக்குறியா? இதோ நான்கு கோணங்களில் நான்கு விஐபிக்கள் அலசுகின்றனர்.

Related Stories: