×

ஐந்து ரகசிய இடங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரு விஷயத்தை செய்யக்கூடாது  என தடுக்கத் தடுக்கத்தான் குழந்தைகளுக்குக்கூட அதன்மீது ஆர்வம் வரும். உலகின் எந்த மூலைக்கும் சென்று வரும் செல்வாக்கு படைத்த நபர்களும் போக முடியாதபடி தடை செய்யப்பட்ட ரகசிய இடங்கள் சில உண்டு. அவற்றில் டாப் 5 இங்கே...

வாடிகன் ரகசிய ஆவணக் காப்பகம்

கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான போப் ஆண்டவர் வசிக்கும் வாடிகன் நகரம் ஒரு சுதந்திர நாடாகும். இங்குதான் வாடிகன் ரகசிய ஆவணக் காப்பகம் உள்ளது. இங்கு 8ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்திலிருந்து பொறுப்பு வகித்துவந்த அனைத்து போப்களின் தனிப்பட்ட ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1881 வரை இது வாடிகனில் வசிக்கும் மக்கள் மட்டும் பார்க்கும் இடமாகத் திகழ்ந்தது.

அதன்பின் யாரையுமே அனுமதிப்பதில்லை. இந்த நூல் நிலையத்தில் மிக ரகசிய ஆவணங்கள் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அதோடு கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முந்தைய காலம் மற்றும் ஏசுவின் பிறப்புக்குப் பிந்தைய கால நிகழ்வுகளைக் குறித்த விலை மதிப்பில்லாத கையெழுத்துப் பிரதிகளின் தொகுதிகளும் இங்குள்ளன.

ஸ்வால்பார்ட் உலக விதைகள் காப்பிடம்

திடீரென ஏதோ ஒரு பேரழிவு ஏற்பட்டு, இந்த உலகத்தில் இருக்கும் பயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டால் உணவுக்கு எங்கே போகும் மனித இனம்? இந்த முன்னெச்சரிக்கையில்தான், நார்வே நாடு ஒரு விதைகள் காப்பிடத்தை அமைத்துள்ளது. உலகில் இப்போது விளையும் அனைத்து வகை பயிர்களின் தரமான விதைகளும் இங்கு சேமிப்பில் உள்ளன. நார்வே நாட்டின் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவில் இது உள்ளது. இது ஆர்க்டிக் பெருங்கடலில் வட துருவத்திலிருந்து 1300 கி.மீ. தொலைவில் எவரும் எளிதில் அணுகமுடியாத இடத்தில் அமைந்துள்ளது. விதைகளுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதற்கு யாரும் நெருங்க முடியாத பாதுகாப்புள்ளது.

நீஹாவ் தீவு

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஹவாய், மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமாகும். இங்குள்ள நீஹாவ் என்ற தீவில் 130 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இவர்கள் ஹவாய் பழங்குடி மக்கள். இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வாடகை இல்லை. சீரான சாலைகள் இல்லை, தொலைத்தொடர்பு வசதியில்லை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது. இவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் உட்பட அனைத்துமே ஹவாய் தீவிலிருந்து கப்பல் மூலமாகவே வருகின்றன. 1915ம் ஆண்டிலிருந்து இந்த இடத்திற்கு வெளியாட்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தனியார் ஒருவருக்குச் சொந்தமான தீவு என்பதால் இப்படிக் கட்டுப்பாடு. எனினும் அமெரிக்க ராணுவத்தினர் மட்டும் இங்கு அனுமதி இல்லாமல் வர முடியும்.

பிரிட்டிஷ் விமானப்படை

மென்வித் ஹில் ஹீரோ ஜேம்ஸ்பாண்டுக்கு சொந்தமாக ஒரு ஹைடெக் ரகசிய வாழ்விடம் சாத்தியம் என்றால், அது இதுவாகத்தான் இருக்க முடியும். பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான ‘மென்வித் ஹில்’ என்ற இந்த ராணுவ தளம், இங்கிலாந்தின் வடக்கு யார்க்‌ஷயரில் இருக்கிறது.
இதுதான் உலகிலேயே மிகப்பெரிய மின்னணு கண்காணிப்பு மையமாகக் கருதப் படுகிறது. இம்மையத்தின் மூலம் அமெரிக்காவும் பிரிட்டனும் பல்வேறு நாடுகள் மற்றும் குழுக்களின் தகவல்தொடர்புகளை இடைமறித்துக் கேட்டு, உலகின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

ஏரியா 51

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ், கேளிக்கைச் சுற்றுலாவின் உலகத் தலைநகரம். ஆனால் இந்த ஜாலி, வெளிப்படை எல்லாம் இந்த நகரத்தோடு சரி! இங்கிருந்து வடக்கே 129 கி.மீ தொலைவில் உள்ள ‘ஏரியா 51’ என்ற ராணுவத் தளம், டாப் சீக்ரெட் ரகசியங்களின் காப்பிடம் என்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. வியட்நாம்  யுத்த காலத்திலிருந்து அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. பல ரகசிய வேலைகளை இங்கிருந்தே செய்துவருகிறது. மிக முக்கிய ராணுவ தளமான இங்கு அரசின் அதி ரகசிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

Tags : places , Five, Secret Places
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு