சலூன் நூலகம்

நன்றி குங்குமம் முத்தாரம்

பொதுவாக சலூன் கடையை கலர் கலரான கவர்ச்சிப் படங்களே அலங்கரித்திருக்கும். ஆனால், இதற்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது தூத்துக்குடி மில்லர்புரத்திலிருக்கும் அந்தச் சிறிய சலூன் கடை. பாரதியாரில் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன் வரை பலரின் நூல்கள் கடை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன.ஒரு குட்டி நூலகத்தை யே தன் ‘சுசில்குமார் அழகு நிலைய’த்தில் உருவாக்கி வைத்திருக்கிறார் புத்தகப் பிரியரும் கடை உரிமையாளருமான பொன். மாரியப்பன்.

‘‘சும்மா விளம்பரத்துக்காக இதை உருவாக்கல சார்... என்னோட வாழ்க்கைக்கு புத்தகங்கள்தான் துணையா இருந்துச்சு. என்னைப் போலவே மத்தவங்களுக்கும் புத்தகங் கள் வழிகாட்டியா இருக்கணும்னுதான் இந்த நூலகத்தை ஆரம்பிச்சேன்...’’ என நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார் பொன்.மாரியப்பன். ‘‘எட்டாவது வரைதான் படிச்சேன். குடும்பச் சூழலால வேலைக்குப் போக வேண்டியதாகிடுச்சு.

ஒரு வக்கீல் ஆபீஸ்ல பணியாற்றும்போது அங்க வர்ற பத்திரிகைகள தொடர்ந்து படிச்சேன். அங்கிருந்துதான் என்னோட வாசிப்பு ஆரம்பமா னது. அப்புறம் ஒரு பத்திரிகையில கவிக்கோ அப்துல் ரகுமானின், ‘இது சிறகுகளின் நேரம்’ தொடரை வாசிச்சேன். அது என்னை ரொம்பப் பாதிச்சது. பிறகு, ஒரு தனியார் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா, அங்க ஏற்றத்தாழ்வு பார்த்தாங்க. அதனால, அங்கிருந்து வந்து சுயதொழில் செய்யலாம்னு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த சலூன் கடையை ஆரம்பிச்சேன்...’’ என்கிறவர் இந்தத் தொழிலைத் தன் தாத்தாவிடம் இருந்து கற்றுள்ளார்.

 ‘‘ஆரம்பத்துல கடைக்குப் பெரியவங்க தவிர்த்து படிக்கிற பசங்களும் நிறைய வந்தாங்க. அவங்க எல்லோர் கையிலும் செல்போன் இருக்கும். முடி வெட்ட காத்திட்டிருக்குற நேரத்துல வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு நோண்டிக்கிட்டே இருந்தாங்க. அவங்களுக்குப் பயனுள்ளதா இருக்கணும்னு புத்தகங்கள் வாங்கி வச்சேன். முதல்ல அஞ்சாறு புத்தகங்கள்தான். பிறகு, இங்க வர்றவங்ககிட்ட அரசியல் பேச வேண்டாம்; புத்தகத்தை வாசிங்கனு கேட்டுக்கிட்டேன்.

ஆரம்பத்துல என்னவோ போலத்தான் வாடிக்கையாளர் களுக்கு இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு பலரும் பாராட்டுறாங்க. இதுக்கிடையில, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புத்தகங்களே துணை’ங்கிற வீடியோவை யூ டியூப்ல பார்த்தேன்…’’ என்ற படியே குரல் உடைந்து நிறுத்தினார்.  ‘‘அதைச் சொல்லும் போதே எனக்குக் கண்ணீர் வருது. என்னை ரொம்ப பாதிச்ச வீடியோ. அந்தப் பேச்சை ஆடியோவாக மாத்தி கடையில போட்டு நிறைய வாட்டி கேட்டேன்.  வாடிக்கையாளர்களையும் கேட்க வச்சேன். பிறகு, எஸ்.ராமகிருஷ்ணன் அய்யாகிட்ட பேசினேன். அவர் நம்பிக்கை தந்ததுடன் என்னைப் பத்தி அவரின் பிளாக்கில் பாராட்டி எழுதினார்.

இந்நேரம், நிறைய புத்தகங்கள் வாங்கி ஷோகேஸ்ல அடுக்கினேன். இங்க வர்ற பசங்கள படிக்கச் சொன்னேன். படிச்சு முடிச்சதும், மனம் ஈர்த்த வரிகள மட்டும் நோட்டுல குறிப்பெழுத செய்தேன். அதை இப்பவரை பின்பற்றிட்டு இருக்கேன். அப்புறம், சுகி சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், எஸ்.ராமகிருஷ்ணன், பர்வீன் சுல்தானானு நிறைய பேரின் உரைகளைக் காலையிலும், மாலையிலும் ஆடியோவாகப் போடுவேன். இதையும் வர்றவங்க கேட்பாங்க...’’ என்ற பொன். மாரியப்பனின் கடையில் தற்போது அறுநூறுக்கும் மேற்பட்ட  புத்தகங்கள் உள்ளன.

‘‘வாசிப்பு ஒரு மனுஷனை முழுமையா மாத்தும்னு சொல்வாங்க. அதுக்கு நல்ல உதாரணம் நான். இப்ப என்னோட ஆசை, கனவெல்லாம் இந்த சலூன் நூலகத்தை விரிவாக்கி பெரிசா கொண்டு வரணும்ங்கிறது. அதுக்காக என்னால முடிஞ்சளவு நூல்கள் வாங்கிட்டு இருக்கேன். ஆனா, இடம்தான் போதல. அதுக்கு அரசு கருணையோடு ஓர் இடம் கொடுத்து உதவினா நல்லாயிருக்கும்.’’ என்ற கோரிக்கையுடன் முடித்தார் பொன்.மாரியப்பன்.

Related Stories: