×

ரேப் இன் இந்தியா விவகாரம்: ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ரேப் இன் இந்தியா என ராகுல் காந்தி கூறிய விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது. கடந்த வியாழனன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஜ்மகாலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அறிவித்தார் என்றும், ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை ரேப் இன் இந்தியா திட்டமாக மோடி மாற்றி விட்டார் என்று விமர்சித்திருந்தார்.

நாட்டில் எங்கு சென்றாலும் பாலியல் பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக பெண் எம்பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பினர். இந்தியாவை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசிவிட்டதாக பெண் எம்பிக்கள் தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் இவ்விகாரம் குறித்து பெரிதும் பேசப்பட்டது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு ஸ்மிருதி இரானி தலைமையிலான பாஜக குழு நேரில் சென்று ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு ஒன்றை அளித்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து இந்தியாவை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் டெல்லி ராம்லீலா திடலில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையை பேசுவதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன், எனறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்மிரிதி இரானி அளித்த புகாரின் பேரில் ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : India ,Chief Election Commission , Rape in India, Rahul Gandhi, Jharkhand, Chief Electoral Officer, Election Commission
× RELATED பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால்...