டெல்லியில் மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்தது.  இதனால் ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க ராணுவம் சென்றது. வதந்திகள் பரவாமல் தடுக்க, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் வன்முறை ஏற்படவே அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.  தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை போலீசார், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என 60 பேர் காயமடைந்து உள்ளனர்.  50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தென்கிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்த நிலையில், போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் நேற்று மாலை 13 மெட்ரோ நிலையங்களின் வாயில் கதவுகளை மூடியது. இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகினர். இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன.  அனைத்து நிலையங்களிலும் வழக்கம்போல் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

Related Stories: