×

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ. ஆகும். தமிழகம் பெறும் ஆண்டு மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகம் மழை பெறும். இந்த மழையை தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 20-ம் தேதிக்கு முன்போ அல்லது பின்னரோ வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் முதல் பாதியில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதன் பின்னர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை இல்லை. இதனால் இயல்பான மழை அளவை தமிழகம் பெறுமா? என்ற சந்தேகமும் நிலவியது.

அப்படி இருந்த சூழ்நிலையில், நவம்பர் மாதத்தில் 28, 29, 30-ம் தேதிகளிலும், கடந்த 1, 2, 3-ம் தேதிகளிலும் தமிழகத்தில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதில் கடந்த 1-ம் தேதி ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதன்பின்னர், மழை சற்று குறைந்தது. நேற்று முன்தினமும், அதற்கு முந்தையநாளும் தமிழகத்தில் ஓரளவு மழை பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் நந்தியார் நீர்நிலை பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியது. வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் போன்ற வானிலை நிகழ்வுகளினால் தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக மேலடுக்கு சுழற்சியால் மட்டுமே மழை கிடைத்து இருக்கிறது. அதுதவிர காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலம் மற்றும் புயல் போன்ற எந்த வானிலை நிகழ்வுகளும் இதுவரை ஏற்படவில்லை.

அப்படி எந்த நிகழ்வுகளும் இல்லாமலேயே தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறும் மழை அளவை தொட்டு இருக்கிறது. அதாவது, வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இயல்பை தொட்டுவிட்டது. தமிழகம் இந்த காலகட்டத்தில் 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது இயல்பை விட அதிகம் ஆகும். மாவட்டங்கள் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்கள் இயல்பை விட அதிகம் மழையை பெற்று இருக்கிறது. அதில் நீலகிரி அதிகபட்சமாக மழை பெற்றுள்ளது. இயல்பைவிட 74 சதவீதம் மழை அதிகம் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன. அதேபோல், குறைந்தபட்ச மழைப்பதிவை பெற்ற மாவட்டங்களில் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகும். அந்த மாவட்டங்கள் இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில் 13 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.

Tags : Northeast Monsoon ,Meteorological Center , Northeast Monsoon starts,October,closes with December, Meteorological Center
× RELATED மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை...